மட்டக்களப்பு மாநகரசபையில் மாபெரும் புத்தக கண்காட்சி –அனைவரையும் அழைக்கின்றது மாநகரசபை

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தக கண்காட்சி இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது.

வாசிப்பு மனிதனை முழுமையடையச்செய்கின்றது என்ற தொனிப்பொருளில் நடைபெற்றுவந்த தேசிய வாசிப்பு மாததிற்கு இணையாக இந்த மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையானது பூபாலசிங்கம் புத்தக நிலையத்துடன் இணைந்து இந்த கண்காட்சியை ஆரம்பித்துள்ளது.

புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டதுடன் சிறுப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் வே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவிஉள்ளுராட்சி ஆணையாளர் கே.பிரகாஸ்,மட்டக்களப்பு மாநகரசபையின் உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று ஆரம்பித்துள்ள புத்தக கண்காட்சியானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர்கள்,இந்திய எழுத்தளர்களின் நூல்கள்,பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கான நூல்கள்,ஆய்வாளர்களுக்கான நூல்கள்,ஆன்மீகம் தொடர்பான நூல்கள்,சிறுவர்கள் முதல் முதியவர்கள்,பெண்கள் என பல்வேறு தரப்பினருக்குமான நூல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியானது காலை 9.00மணி தொடக்கம் இரவு 9.00மணி வரையில் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு தொடர்பான பல வரலாற்று நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அருகிவரும் இளம் சமூகத்தின் மத்தியிலான வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இவ்வாறான கண்காட்சிகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவமளித்துவருகின்றது.