பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்(வீடியோ இணைப்பு)

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்று இரவு ஆரம்பமானது.

இலங்கையின் வரலாற்று பதிகளில் ஒன்றான மண்டூர் கந்தசுவாமி ஆலயம் கந்தபுராணத்து காலத்;தில் உருவான ஆலயமாக கருதப்படுகின்றது.
முருகப்பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் உண்டான போரின்போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒருவேல் கதிர்காமத்திலும் ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக கர்ணபரம்பரைக்கதைகள் தெரிவிக்கின்றன.

கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


நேற்று இரவு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி தலைமையில் கொடியேற்றம் தொடர்பான செய்தி வாசிக்கப்பட்டதை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமானது.

விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று அங்கிருந்து கொடித்தம்பம் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்;டு அங்கு பூஜைகளுடன் ஆலயத்திற்கு உட்பகுதியில் கொடியேற்றம் செய்யப்பட்டது.

ஆலயத்தில் கொன்றை மரங்களைக்கொண்டு இந்த கொடியேற்றம் செய்யப்பட்டது.இதன்போது வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு முன்பாகவும் கொடியேற்றங்கள் செய்யப்பட்டன.

இருபது தினங்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளிவீதியுலா நடைபெறும்.

பாரம்பரிய பூசைமுறைகளுடன் பாரம்பரியமான முறையிலேயே ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவருகின்றது.
நேற்றைய கொடியேற்றத்திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.