விவசாயிகளுக்கு தெரியாமல் திறக்கப்பட்ட அம்மனடி அணைக்கட்டு –கவலை தெரிவிக்கும் விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு சுமார் இரண்டரைக்கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் அது முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி விவசாய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

ஈரளக்குளத்தினை அண்டிய விவசாயிகளின் நன்மை கருதி அம்மனடி அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது.

இந்த அணைக்கட்டினை அண்டியதாக சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் காணப்படுகின்றன.குறித்த அணைக்கட்டியை கட்டியதனால் குறித்த பகுதியில் நீர் சேமிக்கப்பட்டு வறட்சியான கால நிலையில் அதனை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என்ற நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த அணைக்கட்டை திறக்கவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் கோரப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து மாலையுடன் நின்றபோது திடீர் என இடைநிறுத்தப்பட்டு திடீர் என விவசாயிகளுக்கு அறிவிக்காமல் குறித்த அணைக்கட்டு திறக்கப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த அணைக்கட்டின் இரண்டு பகுதிகளிலும் முறையாக பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் மழை காலங்களில் அணைக்கட்டு நீரில் அடித்துச்செல்லப்படும் நிலையும் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் நன்மை கருதி அரசாங்கம் ஒதுக்கீடுசெய்யும் பணங்கள் முறையாக பயன்படுத்தப்படாவிட்டால் அதனால் அந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்தவித பயன்களும் ஏற்படப்போவதில்லை.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எஸ்.வியாழேந்திரன் அணைக்கட்டினை பார்வையிட்டதுடன் குறித்த அணைக்கட்டின் நிலமைகள் தொடர்பில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

அணைக்கட்டினை முழுமையாக பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம்,அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசென்று பூர்த்திசெய்துதருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன் குறித்த அணைக்கட்டு தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் எனவும் குறித்த அனைக்கு வழங்கப்பட்ட நிதியின் பயன்பாடு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.