ஈழத்து திருச்செந்தூர் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ஈழத்து திருச்செந்தூர் ஆலயம் என போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிழக்கிலங்கையின் பெரும் பிரசித்திபெற்ற முருகன் ஆலயமாகவுள்ள இந்த ஆலயம் மகா துறவி ஓங்காரானந்தா சரஸ்வதி சுவாமிகளினால் ஸ்தாபிக்கப்பட்டதாக ஆலய வரலாறுகள் கூறுகின்றன.

இந்தியாவின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை நோக்கியதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

இத்தனை சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

விசேட யாகம் மற்றும் அபிசேக பூஜைகள் நடைபெற்று மூல மூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று மூலஸ்தானத்தில் இருந்து கொடிச்சீலை ஊர்வலமாக ஆலயத்தினை வலம் வந்து கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

இலங்கையில் உள்ள ஆலயங்களில் விசேடமான முறையில் கொடியேற்றம் நிகழும் ஆலயமாகவும் தமிழில் மந்திரம் உச்சரிக்கப்படும் ஆலயமாகவும் இந்த ஆலயம் இருந்துவருகின்றது.

பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் நாத மேள இசை முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து தம்பபூஜை நடைபெற்ற ஆலய முன்றிலில் சேவல்கொடியேற்றம் நடைபெற்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் சுவாமி வீதியுலா என்பன நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 08ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

இன்று கொடியேற்ற திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.