மிக நீண்ட காலத்தின் பின் மட்டக்களப்பில் டெனிஸ் விளையாட்டு சுற்றுப்போட்டிமட்டக்களப்பு டெனிஸ் விளையாட்டு பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் இலங்கை டெனிஸ் விளையாட்டு சம்மேளனம் இணைந்து நடாத்தும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான டெனிஸ் விளையாட்டு சுற்றுப்போட்டி இன்றைய தினம் (17) பயிற்சி நிலையத்தின் தலைவர் சுதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் அவர்களும்
 அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஜோர்ச்பிள்ளை, ஹட்டன் நஷனல் வங்கியின் பிரதி முகாமையாளர், டோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தின் மாவட்டப் பிரதானி உட்பட மட்டக்களப்பு மாவட்ட டெனிஸ் விளையாட்டு பயிற்சி நிலையத்தின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், போட்டியில் கலந்துகொள்ளும் சிறுவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பயிற்சி நிலையத்தின் சீருடை மாநகர முதல்வருக்கு பயிற்சி நிலைய தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிதிகளால் டெனிஸ் பந்துகள் வீசப்பட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட சில காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் டெனிஸ் விளையாட்டு மருவியிருந்த சந்தர்ப்பத்தில் மேற்படி பயிற்சி நிலையத்தினால் இவ்விளையாட்டு புத்துயிர் அளிக்கப்பட்டு மிக நீண்ட காலத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச் சுற்றுப் போட்டி நடைபெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.