நல்லாட்சி அரசால் தொடர்ந்து ஏமாற்றப்படும் பட்டதாரிகள்.
( மண்டூர் நிருபர்)  பட்டதாரிகளது தொழிலுரிமை போராட்டம் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை நல்லாட்சி அரசாங்கம் சார்ந்து எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்தாகிவிட்டது என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சிவகாந்தன்  செய்திச்சேவை ஒன்றி     ற்கு வழங்கிய செவ்வியிலே தெருவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்
கடந்த எமது தொழிலுரிமை போராட்ட காலங்களில் வழங்கப்பட்ட தொழிலுரிமை கோரிய மகஜர்களுக்கும், ஜனாதிபதியுடனான நேரடி சந்திப்புக்களுக்கும் இதுவரை இவ் நல்லாட்சி அரசாங்கம் செவிசாய்த்ததாய் இல்லை என்பதே உண்மை.

எமது போராட்டங்களின் சிறு சமிக்கையாக, எதிர்காலத்தில் வழங்கப்படுவதற்கான 20000 பட்டதாரி பயிலுனர் நியமனங்களுக்கு நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டபோதிலும் அவை இன்று இவ் அரசாங்கத்தினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

எமது தொழிலுரிமை போராட்டம் ஆரம்பித்யஅன்று தொடக்கம் இன்றுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நன்மை பயக்கும் வகையில், புள்ளி அடிப்படையில் நியமனத்தை விடுத்து பட்டம்பெற்ற வருட அடிப்படையில் நியமனம் வழங்கவேண்டும், வடகிழக்கில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் பிந்தியவயதில் பட்டதாரிகள் பட்டம் முடிக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டமையால் 35  வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நியமனத்துள் உள்வாங்கி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும், பட்டதாரிகளுள் பிளவை ஏற்படுத்தாத வகையில் உள்வாரி, வெளிவாரி எனும் பிரிவினையை ஏற்படுத்தாது ஒட்டுமொத்த பட்டதாரிகள் எனும் வகையில் நியமனம் வழங்கப்படவேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளையே அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். ஆனால் இவ் நல்லாட்சி அரசாங்கள் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சை போக்காக நியமனத்தினை இழுதடிப்பு செய்வதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு வழங்குவதாக கூறிய 20000 பட்டதாரி நியமனம் சார்ந்து அண்மையில் முதல் கட்டமாக 35 வயதிற்கு உட்பட் 5000 பட்டதாரிகளுக்கு புள்ளியடிப்படை நியமனமும் மீதமுள்ள 15000 பட்டதாரிகளுக்கு இரண்டாம் கட்டமாக பட்டம் பெற்ற வருட அடிப்படையில் 45 வயது வரையான பட்டதாரிகளுக்கு நியமனமும் என நாளுக்கொரு திட்டங்களை வகுத்து பட்டதாரிகளது நலனில் அக்கறையின்றி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் புள்ளி அடிப்படையில் வழங்குவதற்காக திட்டமிட்டுள்ள முதற்கட்ட நியமனங்கள் முற்றுமுழுதாக பட்டதாரி நலனை சிதைக்கும் என்பதும் உண்மையான விடயம். புள்ளி அடிப்படையில் நியமனம் வழங்குவதற்காக நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வானது உண்மைத்தன்மையான நேர்முகத்தேர்வாக அமையவில்லை, இதனால் நேர்மையான, திறமையான பல பட்டதாரிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன் அரசியல் தலையீடுகளும், அரசியல் பழிவாங்கல்களுக்கும் உட்பட்டதாகவே இப் புள்ளி அடிப்படை நியமனம் அமையும் என்பது பறுக்கமுடியாத உண்மை.

வேலையற்ற பட்டதாரிகளது நியமனம் சார்ந்து கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிடம் நேரடியாக வழங்கிய வாக்குறுதிகளையும் நாம் மறந்துவிட முடியாது. கடந்த 21.01.2018 மாவடிவேம்பு பிரதேசத்தில் ஜனாதிபதியின் வருகையுடன் இடம்பெற்ற ஒன்றுகூடல், 03.03.2018 அன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு என இருவேறு சந்தற்பங்களில்  ஜனாதிபதி அவர்களை நேரடியாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் சந்தித்தசமயம் ஆறுமாத காலப்பகுதியில் நாடுபூராகவும் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் ஒரு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியினது வாக்குறுதியே இன்று பொய்யாகிவிட்டதை உணர்கின்றோம்.

எனவே எவ்வகையிலும் தொடர்ந்து நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை எம்மால் ஏற்கமுடியாது, பட்டதாரிகளுக்கு பாதகமாக அமையும் புள்ளி அடிப்படையிலான நியமனத்தை விடுத்து பட்டம்பெற்ற வருட அடிப்படையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை முன்னுரிமைப்படுத்தி அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க இவ் நல்லாட்சி அரசாங்கம் முன்வரவேண்டும். 

இல்லையேல் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பட்டதாரிகள் சுயேட்சையாக களமிறங்கி எம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பாடம் புகட்டவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.என்பது குறிப்பிடத்தக்கது.