மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். சாணக்கியன் அறிவுரை

(பழுகாமம் நிருபர்)
மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் தெரிவித்தார். மகிளவட்டுவான் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

அண்மைக் காலமாக மாணவர்களின் ஒழுக்கமானது தவறான பாதையில் செல்வதை நாம் ஒவ்வொரு நாளும் காண்கின்றோம்.  மாணவர்கள் ஒழுக்கத்தில் நேரான சீரான பாதையில் செல்வார்களாயின் கல்வியும் தானாக சேர்ந்து வரும். வேதனையான விடயம் என்னவென்றால் பெண் மாணவர்களின் பாதுகாப்பும் கூட இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. அவர்கள் தங்களை பாதுகாப்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் விலையுயர்ந்த தொலைபேசிகளை பாவிக்கின்றீர்களாயின் அதிலும் பெற்றோர்கள் கவனமெடுக்க வேண்டும். இன்று சமூக வலைத்தளங்களினூடாக முகம்தெரியாத நபர்களினால் ஒழுக்கயீனமாக நடந்து பல இளசுகளின் தற்கொலைக்கும் காரணமாகின்றனர்.

மாணவர்களின் மீது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்குவதன் ஊடாக சமூகத்தில் நற்பிரஜைகளாக வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.