செங்கலடி பொதுச்சந்தையினை அமைத்து தருவேன் -அமைச்சர் மனோகணேசன் உறுதியளிப்பு

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி நகரில் உள்ள மிகவும் பழமையான பொதுச்சந்தையினை நவீன பொதுச்சந்தையாக அமைப்பதற்கும் செங்கலடி நகரில் பஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் தேவையான நடவடிக்கையினை எடுப்பதாக தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் உறுதியளித்துள்ளார்.
நேற்று மாலை செங்கலடி நகருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் நகரினை கால்நடையாகச்சென்று பார்வையிட்டதுடன் செங்கலடி பொதுச்சந்தை மற்றும் பஸ் நிலையத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக இந்த விஜயத்தினை அமைச்சர் மனோகணேசன் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பொதுச்சந்தையினை முழுமையாக பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள வர்த்தகர்களுடனும் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் அங்குள்ள பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

மிகவும் பழமையான குறித்த பொதுச்சந்தை கட்டிடமானது உடைந்து விழும் நிலையில் உள்ளதாகவும் குறித்த சந்தையினை புனரமைக்க நடவடிக்கையெடுக்குமாறும் வர்த்தகர்களினால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து செங்கலடி நகரில் உள்ள சிறிய பஸ் நிலையத்திற்கும் சென்று அங்கு பார்வையிட்டதுடன் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் பஸ் நிலையத்தின் நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது செங்கலடி-பதுளை வீதியூடான போக்குவரத்துகள்,மட்டக்களப்பு-வாழைச்சேனை ஊடான போக்குவரத்துகள் இந்த பகுதியூடாகவே நடைபெறுவதனால் பொதுமக்கள் தமக்கான பஸ்களில் செல்லுவதற்கு தரித்து நிற்பதற்கான பஸ்தரிப்பிடம் இல்லாத நிலையிருப்பதாகவும் அவற்றினை அமைத்து தருவதற்கான நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது செங்கலடி பொதுச்சந்தை மற்றும் பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் அதற்கான செயற்றிட்டத்தினை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து ஏறாவூர் காட்டுமாஞ்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அங்கு அமைச்சர் ஆலய நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.