மாநகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் த.ம.வி.பு கட்சி உறுப்பினர்கள்




மாநகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் த.ம.வி.பு கட்சி உறுப்பினர்கள்…

மட்டக்களப்பு மாநகரசபையால் ஒருமாத கால இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலவிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபையின் 05 உறுப்பினர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகரன் அவர்களால் மட்டக்களப்பு மாநகரசபையின் வேலைவாய்ப்புகளுக்கு ஆட்கள் உள்ளீர்க்கப்படும் போது வெளிப்படுதண்மையுடனும், திறந்த நேர்முகத் தேர்வின் மூலமுமே உள்ளீர்க்கப்பட வேண்டும்.

பின்கதவால் அரசியல் ரீதியாக வேலையாட்கள் உள்ளீர்க்கப்படுமானால் அதற்கெதிராக மக்களிடம் நேரடியாகச் செல்வோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தினை மீளப்பெற வேண்டும் இல்லையெனில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரேரணையானது கடந்த 19ம் திகதி நடைபெற்ற மாநகரசபையின் விசேட அமர்வில் கொண்டுவரப்பட்டது.

இவ்விடயம் சபையில் எவ்வித வாதப் பிரதிவாதங்களுக்கோ, கருத்துகள் கேட்பதற்கோ இடம்கொடுக்காது நேரடியாக வாக்கெடுப்பிற்கு செல்ல முற்பட்ட வேளையில் குறித்த செயற்பாடானது கருத்துச் சுதந்திரத்திற்கு முரணானது அத்துடன் வெளிப்படுத்தண்மையுடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதங்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை இல்லையா? மக்களின் நலன்சார்ந்து அவர்களின் பிரதிநதிகளாகவே நாம் மாநகரசபையில் அங்கம் வகிக்கின்றோம். மக்களுக்காகவே நாங்களே தவிர அரசியற் தலைமைகளுக்காக மக்கள் அல்ல என்பதுவே எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனின் சிந்தனை.

மாநகரசபையின் வெளிப்படு தண்மை வேண்டும் என்ற கோரிக்கை தவறானது அப்படிப் பேச முடியாது என்று ஜனநாயகத்தின் குரள்வளையினை நசுக்க முற்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி எமக்கான பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 05 உறுப்பினர்களும் அன்றைய விசேட அமர்வின்போது வெளிநடப்புச் செய்தது சட்டத்திற்கு முரணானதோ அல்லது சபையை அவமதிப்பதோ எனப் பொருட்படாது.

நாம் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்ததாகவும், சபையில் அவமரியாதை செய்ததாகவும் அதனால் எம் ஐவருக்கும் ஒரு மாத கால தடை உத்தரவுகான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தோம். இது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால் நாம் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகவுள்ளோம் என்று தெரிவித்தனர்.