கதிரவெளி விபத்தில் சமூக சேவையாளர் பலி –கதிரவெளி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கதிரவெளியில் நேற்று (26) மாலை 7.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தைவேல் சிங்காரவேல் (வயது 61) என்பவர் உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிசார் தெரிவித்தனர்.



மட்டக்களப்பு பகுதியில் இருந்து திருகோணமலைக்கு மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனம் வீதியால் சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணையின்போது பொலிசார் தெரிவித்தனர்.



விபத்து இடம்பெற்ற இடத்தில் குறித்த டிப்பர் வாகனம் பிரதேச மக்களினால் எரியூட்டப்பட்ட நிலையில் வாகரை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.



குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் ஊர்பொது மக்கள் எதிர்ப்பை தெரித்த நிலையில் அச்சமயம் பார்த்து விபத்தை ஏற்படுத்திய சாரதி பிரிதொரு டிப்பர் வாகனத்தில் ஏறி தப்பியோடியுள்ளார்.



சடலம் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வாகரைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



உயிரிழந்தவர் முன்னாள் கதிரவெளி கிராமசேவகராகவும் மற்றும் சமதான நீதவானாகவும் மற்றும் கதிரவெளி வீரகத்தி விநாயகர் ஆலய தலைவாகவும் மற்றும் பல அமைப்புக்களின் ஆலோசகராகவும் மிகச்சிறந்த சமூக சேவகருமாக கடமையாற்றியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம்!



இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெறுமதியான உயிரை பறிகொடுத்துள்ளோம் என வாகரை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



மட்டக்களப்பு கதிரவெளியில் ஏற்பட்ட விபத்திற்கு புவிச்சரிதவியல் திணைக்களம் வாகரை வீதியால் ரூட் வழங்கியதே காரணம் என பொது மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் வாகனங்களை நேரடியாக பொலனருவை வீதி ஊடாக அனுப்பாது வாகரை வீதியால் அதிகமான டிப்பர்களை மட்டக்களப்பு மாவட்ட புவிச்சரிதவியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தான் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றது.

எமது வீதிகளில் இரவு நேரங்களில் மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்கள் அதிகரித்துள்ளது.
 இனிமேல் நாம் வாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்களை அனுமதிக்க மாட்டோம். மீறி வந்தால் தாக்குதல் நடத்துவோம். எங்களது உயிர்களுடன் விளையாட வேண்டாம். என தெரிவித்துள்ளனர்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக ஆற்று மணல் ஏற்றி பிரிதொரு மாவட்டங்களுக்குச் செல்லும் டிப்பர் வாகனங்களின் கட்டுப்பாட்டை இழந்த வேகம், தொடர்ச்சியான விபத்து, ஏற்படும் விபத்து மூலம் ஏற்படும் அப்பாவி உயிர் இழப்புக்கள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற நிலையில் சட்டத்தை அமுல்படுத்தும் பொலிசாரின் சட்ட நடவடிக்கை என்பன மந்தகதியில் இடம்பெறுவதாக பொதுமக்கள் மற்றும் விபத்துக்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள் கவலைதெரிவிக்கின்றனர்.



சந்திவெளி வைத்தியசாலை முன்பாக ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் மண் ஏற்றும் டிப்பர் வாகனத்தினால் இடம்பெற்ற கோர விபத்து மூலம் இளம் இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம், கொக்கட்டிச்சோலைப் பகுதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பாடசாலை மாணவி மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பல்வேறு சம்பவங்கள் இவ்வாறான வேறு மாவட்டங்களில் இருந்து எமது மாவட்ட மண்ணை ஏற்றிக் கொண்டு செல்லும்போது பல உயிர்களையும் காவுகொள்கின்ற சம்வங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுவருகின்றமை சுட்டிக்காட்டியுள்ளனர்.