கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை முதல் பல்வேறு வழிபாடுகளும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இலங்கையில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் தான்தோன்றீஸ்வரருக்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

நான்கு சாமங்கள் தான்தோன்றீஸ்வரருக்கு நடைபெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகளில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் வருகைதந்து பங்கேற்றனர்.

அத்துடன் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலய சூழலில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.