மட்டக்களப்பில் சிறுவர் இல்லத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திலிருந்து 2017 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களிற்கான சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று சிறுவர் இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.

சிறுவர் இல்லத்தின் தலைவர் எஸ். சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்ற  மா.உதயகுமாருக்கு இல்ல நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம், பேராதனை மற்றும் கிழக்குப் பல்கலைக்குத் தெரிவான 4 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திலகவதி கரிதாஸ், கல்லடி சிவானந்த வித்தியாலய அதிபர் எஸ். துயாபரன், ஓய்வுபெற்ற ஆசிரியை இந்திராணி தாமோதரம், கல்லடி பேச்சியம்மன் ஆலயத் தலைவர் எஸ். ஹரிதாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.