பெண் வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை பேணுமாறு கோரிக்கை

அரசியல் கட்சிகள் பெண்கள் வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ள பெண்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.புகாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான திருமதி நளினி ரெட்னராஜா கருத்துரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,ஐக்கிய தேசிய கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு,முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

பெண்கள் அரசியலில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையிலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இதன்போது பெண் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரசியல் கட்சிகளில் பெண்களின் மீதான் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தெரிவின்போது பெண்களை உள்ளீர்ப்பது தொடர்பில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக அவர்கள் தயாரிக்கும் வேட்பாளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படவேண்டும் எனவும் இங்கு கலந்துகொண்ட பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.