மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலபோட்டமடு ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்று பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற வவுணதீவு பொலிஸார் காலபோட்டமடு பகுதியில் உள்ள ஆற்றங்கரையினையண்டிய காட்டுப்பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீரின் ஆலோசனையின் கீழ் வவுணதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 20250மில்லி லீற்றர்  கோடா மற்றும் 4125மில்லி லீற்றர் கசிப்பு என்பனவற்றையும் மீட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

பொலிஸார் குறித்த முற்றுகைக்கு சென்றபோது குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் போதையற்ற நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் சட்ட விரோத போதைப்பொருள் நிலையங்கள் முற்றுகையிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.