மட்டக்களப்பு மாவட்டத்தில் 79வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு -இரண்டு நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சிசபைகளுக்கும் 81வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 79வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்  தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ’,தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று நண்பகல் 12மணியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சிமன்றத்திற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் ஆட்சேபனை நேரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்  தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் நடாத்தினார்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுசீலனும் இணைந்திருந்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சிமன்றத்திற்கான வேட்பு  மனு கோரிய அறிவித்தல் டிசம்பர் 04ஆம் திகதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கைகள் 18ஆம் திகதிஆரம்பிக்கப்பட்டு இன்று 21ஆம்’ திகதி 12மணியுடன் நிறைவுபெற்றது.

இக்காலப்பகுதியில் 81வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அது தொடர்பான முடிவுகள் சபை ரீதியாக அறிவிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாநகரசபைக்கு 12கட்சிகளும் ஐந்து சுயோட்சைக்குழுக்களூக 17வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அவற்றில் 16 ஏற்றுக்கொள்ளப்பட்டு 01வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே காரணமாகும்.

காத்தான்குடி நகரசபைக்கு 08கட்சிகளும் 03 சுயேட்சை குழுக்களும் வேட்பு  மனுவை தாக்கல் செய்திருந்தது.அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு பிரதேசபைக்காக 09 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது.அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபைக்கு 09 கட்சிகளும் 02 சுயேட்சைக்குழுக்களுமாக 11வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அவற்றில் பத்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,ஒருவேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.தேசிய மக்கள் கட்சியின் வேட்பு மனு பெண் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தமையினால் நிராகரிக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்றுக்கு ஐந்து கட்சிகளும் 01 சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருந்தது.06வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேசசபைக்கு 07கட்சிகளும் 02 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல்செய்தது.அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு ஏழு கட்சிகளும் 01சுயேட்சைக்குழுமாக 08 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசசபைக்காக 07கட்சிகளும் 02 சுயேட்சைக்குழுக்களுமாக 09வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
08 உள்ளுராட்சிசபைகளுக்கும் 81வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று 79வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.