மட்டக்களப்பில் போதையற்றநாட்டை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வுபேரணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதையற்றநாட்டை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வுபேரணியொன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வாக இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் போதையற்றநாட்டை உருவாக்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிசிரகுமார தலைமையில் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தருமான சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோமலை மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள்,பொலிஸ்உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லடி பாலத்திருகில் நடைபெற்ற நிகழ்வினை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது.இந்த ஊர்வலத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட்இருந்து இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

ஊர்வலமானது மட்டக்களப்பு திருமலை வீதியுடாக மட்டக்களப்பு நகருக்குள் சென்று மட்டக்களப்பு மணிக்கூண்டுகோபுரம் ஊடாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம் வரையில் நடைபெற்றது.