சுயநிர்ணய உரிமையினை இழக்க செய்யும் எந்த தீர்வினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது –சிறிநேசன் எம்.பி.

தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கமுடியாத, அரைகுறையான, சுயநிர்ணய உரிமையினை இழக்ககூடிய எந்த தீர்வினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

ஒரு சமூகம் பாதிக்கப்படுவதை இந்த நாட்டினை நேசிக்கும் மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தலும் கல்விப்பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(19-11) மாலை நடாத்தப்பட்டது.

கிரான்குளம் சீமூன் விடுதியில் புதுக்குடியிருப்பு கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் ரி.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.நல்லதம்பி,காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2017 மற்றும் 2016ஆம்ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஆசிரிய துறையில் சிறந்தசேவையாற்றிய ஆசிரிர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

இந்த நாடு பல்லின சமூகங்களை கொண்டநாடு.இந்த நாட்டில் மூன்று இனங்கள் தேசிய இனங்களாக வாழ்கின்றன.இந்த நாடு வளம்பெறவேண்டுமாகவிருந்தால் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதமில்லாமல் சகல மக்களும் சமத்துவமாக மதிக்கப்படவேண்டும்.
எண்ணிக்கையில் அதிகமாகவுள்ளளோம் என்பதற்காக எண்ணிக்கையில் குறைவாக இருப்பவர்களை அடிமைப்படுத்துகின்ற எண்ணங்கள் இந்த நாட்டில் இருக்ககூடாது.

சிறுபான்மையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் கண்ணீர்சிந்துவது என்பது துன்புறுத்தப்படுவது என்பது இந்த நாட்டிற்கு ஆரோக்கியமான எதிர்காலத்தினை ஏற்படுத்தி தராது.

காலி மாவட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்காக பெரும்பான்மையினத்தர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள வன்முறையென்பது கண்டிக்கத்தக்கது.இந்த நாட்டினை நேசிக்கின்ற எவரும் இவ்வாறான வன்முறைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.இவ்வாறான செயற்பாடுகள் எங்கும் இடம்பெறக்கூடாது.

நல்லாட்சியென்பது நல்ல ஆட்சியாக இருக்குமானால் இவ்வாறான வன்முறைகள் தவிர்க்கப்பட்டு எதிர்காலத்தில் சகல மக்களும் மகிழ்ச்சியாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய நிலையினை ஏற்படுத்தவேண்டும்.

இடைக்கால அறிக்கையென்னும் விடயம் ஒரு முடிவான அறிக்கையில்லை.அந்த அறிக்கையில் பல விதமான திருத்தங்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு அது தமிழ் மக்களினால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளும்.

இந்த அரசாங்கம் அதனை நிறைவேற்றமுடியாது என்ற நிலையேற்பட்டால் உள்நாட்டில் இந்த பிரச்சினை தீர்க்கமுடியாது வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்படக்கூடிய ஒரு சூழ்நிலையுள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கமுடியாத, அரைகுறையான, சுயநிர்ணய உரிமையினை இழக்ககூடிய எந்த தீர்வினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது.