பாரம்பரியங்களை மறந்து பெறுமதியற்றவர்களாக இன்றைய மாணவர்கள் உள்ளனர் –மட்டக்களப்பு பிரதி கல்வி பணிப்பாளர்

இன்றைய பாடசாலை மாணவர்களுக்கு வாசிப்பு மறக்கடிக்கப்பட்டதன் காரணமாக கிராமிய கலை,கலாசாரங்கள்,விளையாட்டுகள் தொடர்பான எந்தவித அறிவுகளும் அற்றவர்களாக எமது பாரம்பரியங்களை மறந்து இன்றைய சமூகத்தில் பெறுமதியற்றவர்களாக காணப்படுவதாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எஸ்.எம்.ஹைதர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டிட திறப்பு விழாவும் தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எஸ்.எம்.ஹைதர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுபெற்ற நூலகர் திருமதி தவமணிதேவி அருள்நந்தி கலந்து சிறப்பித்தார்.

இதன்போது பாடசாலையில் அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் பிரதிக்கல்விப்பணிப்பாளரினால் திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலையில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் வாசிப்பின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற நாடகம் மற்றும் பேச்சு நிகழ்வுகளும் நடைபெற்றன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எஸ்.எம்.ஹைதர் அலி,
நவீன ஊடகங்களின் ஊடுருவல் காரணமாக வாசிப்பு என்பது சமூகத்தில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு பழக்கமாக காணப்படுகின்றது.

பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பதற்கு நேரங்களை ஒதுக்கிக்கொள்ளமுடியாத வகையில் வேலைப்பளுக்கள் அதிகரித்துச்செல்கின்றன.

பாடசாலைகளில் நேர அட்டவனைகளில் நூலகத்திற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.அதனை ஓய்வுநேரமாக எடுத்துக்கொள்கின்றார்கள்.சிலர் வேறு பாடங்களை அந்தவேளையில் கற்பிக்கின்றார்கள்.நூலகத்தின் பெறுமதியினையும் வாசிப்பின் பெறுமதியினையும் உணராத வகையில் பாடசாலைகள் செயற்பட்டுக்கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இன்றைய பாடசாலை மாணவர்களுக்கு வாசிப்பு மறக்கடிக்கப்பட்டதன் காரணமாக கிராமிய கலை,கலாசாரங்கள்,விளையாட்டுகள் தொடர்பான எந்தவித அறிவுகளும் அற்றவர்களாக எமது பாரம்பரியங்களை மறந்து இன்றைய சமூகத்தில் பெறுமதியற்றவர்களாக மாணவர்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலை மாற்றமடையவேண்டும் என்ற நோக்குடன் இவ்வாறான வாசிப்பு மாதத்தினையொட்டி நடாத்தப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மாதம் தோறும் ஆசிரியர் ஒருவரை பொறுப்பாக நியமித்து வாசிப்பினை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றார்.