மட்டக்களப்பில் சுனாமி பீதியால் மக்கள் மத்தியில் பதற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லையெனவும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்ல்hறு மற்றும் துறைநீலாவனை ஆகிய பகுதிகளில் சில கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக இந்த சுனாமி தொடர்பான வாந்தி பரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி தொடர்பான வதந்தி பரப்பப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாவலடி தொடக்கம் நாவற்குடா வரையான பகுதிகளிலும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளிலும் இந்த வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து கரையோரங்களில் வீடுகளில் இருந்த மக்கள் கையில் கிடைத்த பொருட்களுடன் வீட்டை விட்டு வெளியேறி பிரதான வீதியை நோக்கிவந்ததை காணமுடிந்தது.

பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளை பெற்றோர் அழைத்துச்சென்றதன் காரணமாக பாடசாலைகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் சில பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டன.

எனினும் மட்டக்களப்பு நாவலடி பகுதியில் சில கிணறுகளில் திடீர் என நீர் ஒரு அடிக்கு மேல் வற்றியதாகவும் இதன் காரணமாக தாங்கள் அச்ச நிலையினையடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட சுனாமியினால் கடுமையான இழப்புகளை எதிர்கொண்ட பகுதி மக்கள் என்ற அடிப்படையில் சுனாமி தொடர்பான அச்ச நிலையில் தொடர்ச்சியாக மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் உரியவர்கள் உரிய நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் சுனாமி தொடர்பான வதந்தியினை தொடர்ந்து பொலிஸாரும் முப்படையினரும் அறிவுறுத்தப்பட்டு மக்கள் இடம்பெயர்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தேவாலங்களில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் சுனாமி வதந்தி என தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர்.