சித்தாண்டி முருகன் ஆலயத்தில் பொதுமக்களினால் இடைக்கால நிருவாகம் தெரிவு


கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புப் பெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக விளங்கும் புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிருவாகத்தினரது தொடர் குழப்பகரமான சூழ் நிலைக்கு முற்றுப்புள்ளி  வைக்கும் முகமாக இன்றைய தினம் ஊர்பொதுமக்கள் பெருமளவானவர்கள் ஒன்றுகூடி ஆலயத்தின் எதிர்கால நலன் மற்றும் சித்தாண்டி மக்களின் சமூகம் சார்ந்த நலனைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிருவாக சபையினை ஏகோபித்த ஆதரவுடன் தெரிவுசெய்தனர்.


அக்கோயிலன் நிருவாகக் கட்டமைப்பு குடிப்பரம்பரையை மையமாக கொண்டிருந்தவேளையில் கடந்த பல ஆண்டு காலமாக ஆலயத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் குடிப்பரம்பரையினருக்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பலவாறாக பிரிந்த குடிப்பரம்பரையினர் ஆலயத்தின் நிருவாக கட்டமைப்பை கைப்பற்ற முற்படுகின்றவேளையில் அவ்வப்போது ஆலயத்திற்குள்ளும் மற்றும் வெளியிலும் முட்டிமோதும் நிலைமை காரணமாக அடிக்கடி பொலிஸ் நிலையம் மாத்திரமல்ல நீதிமன்று ஊடாகவும் வழக்குகள் இடம்பெற்றுவருகின்றது.

ஆலயத்தின் மகோற்சவ காலங்களில் அரங்கேறும் நிருவாகத்தின் குடிப்பரம்பரை மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வன்முறையுடன்கூடிய அதிகார பரவலாக்கம் சூரன்போர் வரைக்கும் தொடர்ந்தும் காணப்படும், அதனடிப்படையில் குறித்த முருகன் ஆலயத்தில் வருடாந்தம் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து கந்தசஷ்டி விரதம் அனுஸ்டிக்க வருகின்ற பக்தர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் மத்தியில் இம்முறை சூரன்போர் இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பமானது மாவட்டத்திலுள்ள அனைவரின் கவனத்தையும் மிக வெகுவாக பாவித்ததன் காரணமாக சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் நிருவாக முரண்பாட்டை ஒரு பேசுபொருளாக கொண்டு சமூக வலைத்தள ஊடகங்கள் உட்பட புத்திஜீவிகளும் தங்களின் ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமையைக் கருத்தில் கொண்டு ஆலயம் மற்றும் பழம் பொருந்திய சிகண்டி முனிவர் ஆசீர்வாதம் பெற்ற சித்தாண்டிக்குடியின் எதிர்கால நலன்கருதி சித்தாண்டி இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் பொதுமக்கள் என பலர் ஒன்றுகூடி இன்றைய தினம் ஆலயத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களையும் அதன்பால் ஆலயம் மற்றும் ஆலயத்தின் மூலமாக பெறப்படும் வருமானங்களைக் கொண்டு ஊர் சமூகம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஓர் இடைக்கால நிருவாகம் தெரிவுசெய்யப்பட்டது. இதன்போது பெருமளவான பெண்களின் பங்களிக்கு மற்றும் அவர்களின் கருத்துக்களும் கேட்டரியப்பட்டது.

ஆலயத்தின் நிதியிருப்பில் பல்லாயிரம் இலட்சங்கள் முடங்கிக் கிடப்பதாகவும் இதுவரைக்கும் ஆலயத்தை கால காலம் தங்கள் வசப்படுத்தி தற்போதுவரை நிருவாகத்தை கொண்டு நடாத்துக்கின்ற எவரும் தங்களின் இருப்பை ஆலய கர்த்தாக்கள் என தக்க வைக்க நினைக்கின்றார்களே தவிர ஆலயம் மற்றும் சித்தாண்டி ஊர்சார்ந்த சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு இதுவரைக்கும் எவ்விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளைம் மேற்கொள்ளவில்லையென இன்றைய பொது அமர்வில் ஆலயத்தின் முன்றலில் வைத்து முருகனை முன்னிருத்தி தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இன்றைய தினம் ஊர்மக்களின் தீர்ப்பு மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த குரலாக, ஆலயத்தின் நற்பெயருக்கும் ஊரின் நற்பெயருக்கும் கலங்கம் விளைவித்த விளைவித்துக் கொண்டிருப்பர்வர்கள் தங்களின் பிரச்சனையைப் பார்த்துக்கொள்ளட்டும் ஆலயத்திற்கு தற்காலிகமானதொரு நிருவாக கட்டமைப்பு வேண்டும், ஊர் இளைஞர்கள் முன்னெடுத்த சமூகம் மற்றும் ஆலயம் சார்ந்த  விடயத்திற்கு சித்தாண்டி பொதுமக்கள் அனைவரும் ஆதரவு பூரணமாக வழங்கப்படும், குறித்த தற்காலிக நிருவாகசபை தீர்;மானத்தை பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்று வரை சென்று ஏகமானதாக சட்டரீதியான அங்கிகாரத்தைப் பெற்று வெகுவிரைவில் ஆலயத்தின் நிருவாகத்தை பொறுப்பு ஏற்கவேண்டும் மற்றும் இனிவரும் காலங்களில் ஆலயத்தின் உற்சவம் மற்றும் சூரன்போர் அத்துடன் ஏனைய விசேட நிகழ்வுகள் சிறப்பாக அமைவதற்கு பூரண ஆதரவு பொதுமக்கள் சார்பாக வழங்கப்படுமென அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன் பின்னர் மக்களின் ஏகோபித்த முடிவாக ஆலயத்தின் அனைத்துச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தற்காலிக உறுப்பினர்களாக 11 பேர் கொண்ட ஆளுமை மிக்க நிருவாக குழுவினர் உட்பட அதனோடு சார்ந்து 20பேர் கொண்ட அங்கத்துவ குழுவொன்றும் பொதுமக்களினால் தெரிவு செய்யப்பட்டது.

இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட இடைக்கால நிருவாக குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை (8) செங்கலடி பிரதேச செயலாளர் ஊடான போச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து நீமன்றுக்கும் தங்களின் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இடைக்கால நிருவாக குழு உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.