மட்டக்களப்பில் தமிழர்களின் காணியை அத்துமீறி அபகரிக்க முயற்சியால் பதற்றம்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான காணியில் சிலர் வேலிபோட மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதற்ற நிலைமையேற்பட்டது.

தாழங்குடா கல்வியல் கல்லூரிக்கு அருகில் உள்ள காணிகளில் காத்தான்குடியை சேர்ந்த சிலர் அத்துமீறி வேலிகள் அமைக்க முற்பட்டபோதே அங்கு பதற்றம் நிலவியது.

இதன்போது குறித்த பகுதியில் உள்ள காணி சொந்தக்காரர்கள் ஒன்றுகூடியதன் காரணமாக வேலி அமைக்கவந்தவர்கள் அங்கிருந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதமும் இவ்வாறு தமக்குரிய காணிகள் இருப்பதாக கூறி தமிழர்களுக்கு சொந்தமான காணியை சிலர் வேலி அமைக்கமுற்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலையிட்டதன் காரணமாக அங்கு பதற்ற நிலை முடிவுக்கு வந்திருந்தது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அப்பகுதியில் பதற்ற நிலைமையினை ஏற்படுத்தியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த சிலர் தமது காணியை சிலர் உரிமை கொண்டாடி அடிக்கடிவந்து இவ்வாறு வேலிகள் அமைக்க முற்படுவது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.