மட்டக்களப்பு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளபோதிலும் வறுமைக்கு என்ன காரணம்? - கூறுகின்றார் இணைப்பாளர் ஜெயபாலன்

மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு விடயங்களில் தன்னிறைவு பெற்றமாவட்டமாகவுள்ளபோதிலும் இதுவரையில் வறுமையான மாவட்டமாக இருப்பதற்கான காரணம் உற்பத்தியாளர்கள் இன்றும் முதலாம் மட்டத்திலேயே இருப்பதாகும் என மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி வேலூர் மகளிர் சங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வாழ்வாதார உதவி வழங்கலும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும்நிகழ்வும் இன்று கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லடி வேலூர் கிரா அபிவிருத்தி சங்க மண்டபத்தில் கல்லடி வேலூர் மகளிர் சங்கத்தின் தலைவி க.ராஜகலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ.செல்வநாதன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் ந.துஷோகாந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வறிய பத்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதுடன் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதன்போது கல்லடி வேலூர் பகுதியில் சிறப்பாக சேவையாற்றிவரும் கிராமசேவையாளர் செ.பாக்கியநேசன் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் நன்கொடையாளர்கள், கல்லடி வேலூர் மகளிர் சங்கத்தின் உறுப்பினர்கள்,அதிதிகள் என பலர் கலந்துகொண்டதடன் இதன்போது அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இணைப்பாளர் ஜெயபாலன்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்கள் கிராம மட்டத்திலேயே அல்லது முதலாம் மட்டத்திலேயே காணப்படுகின்றது. பெறுமதிச் சங்கிலி என்கிற்ன விடயத்தில் எமது உற்பத்தியாளர்கள் முதலாம் மட்டத்தில் காணப்படுகின்றார்கள். நெல்லை உற்பத்தி செய்பவர்கள் விவசாயிகளாக மாத்திரம் தான் இருக்கின்றார்கள். பாலுற்பத்தி செய்பவர்கள் பாலுற்பத்தியாளர்களாக மாத்திரம் தான் இருக்கின்றார்கள்.

பல்வேறுபட்ட விடயங்களில் நாங்கள் தன்னிறைவு கண்டிருந்தும் இம் மாவட்டம் இன்னும் அபிவிருத்தி செய்யப்படவில்லை. இங்கு போதுமானளவு மீன் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டம் மீன்வளத்தில் தன்னிறைவுள்ள மாவட்டமாகும். நெல் உற்பத்தியில் தன்னிறைவுள்ள மாவட்டமாகும். எங்களுக்கு போதுமான அளவு நெல’லை நாங்களே உற்பத்தி செய்கின்றோம். சோளன், பால் உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள மாவட்டமாகும்.

அப்படியிருந்தும் வறுமையான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதற்கு அடிப்படைக் காரணம் உற்பத்தியாளர்கள் முதலாம் மட்டத்தில் இருப்பதேயாகும். அவர்கள் எந்தவித பெறுமதி சேர் நடவடிக்கையிலும் ஈடுபடவில’லை. மூலப்பொருட்களை வேறு மாவட்டங்களுக்கு விற்பவர்களாக எமது விவசாயிகள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த நிலை மாறவேண்டுமானால் பெண் உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களை மாற்றி முடிவுப்பொருட்களை விற்பவர்களாக அல்லது வழங்குபவர்களாக உலக சந்தையை நோக்கி உற்பத்திப் பொருட்களை மாற்றக்கூடியவர்களாக மாற வேண்டும். எங்களுடைய உற்பத்திப் பொருட்கள் உலக சந்தையை நோக்கி நகர்வதால் மாத்திரமே கிராமங்களை அபிவிருத்தியடைந்த பகுதிகளாக மாற்ற முடியும்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆயிரம் விதவைப் பெண்கள் காணப்படுகின்றார்கள்.85வீதமான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பெரும்பாலான குடும்பங்களில் தலைமை தாங்குபவர்கள் பெண்களாக இருக்கின்றனர். ஆண்களை பொறுத்தவரை 85வீதமானவர்கள் குடிப்பழக்கத்திற்கு உள்ளானவர்களாக இருக்கின்றார்கள். குடிப்பழக்கத்திற்கு உள்ளானவர்கள் குடும்பங்களில் தலைமை தாங்குவதற்கு அருகதை அற்றவர்களாக இருக்கின்றார்கள். பெண்களே குடும்பங்களை வழிநடத்திச் செல்கின்றார்கள். பெண்கள் குடும்பங்களோடு நின்றுவிடாமல் அரசியலுக்கு வந்து வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

நாங்கள் புதியனவற்றை புனைபவர்களாகவும் தொழினுட்பத்தை கற்றுக்கொள்பவர்களாகவும் மாற வேண்டும். பெண் முயற்சியாளர்கள் உருவாகும்போது தான் குடும்பங்கள் கூட வெற்றியடையும். எமது மக்களில் பெரும்பாலானவர்கள் கடனை பெற்று தொழில் ஒன்றை செய்து பின்னர் அதனை கைவிட்டு வேறு ஒரு தொழிலை செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

85வீதமான பெண்கள் கடனில் அடைபட்டிருக்கின்றார்கள். எந்தவித தொழிலும் செய்யாமல் கடன் பெறுபவர்களாக இருக்கின்றார்கள். தொழில் செய்து வருகின்ற இலாபத்தில் தான் நாங்கள் வட்டியை செலுத்த வேண்டும். கடனிலே வட்டியையும் மாதாந்த கொடுப்பனவையும் செலுத்துகின்ற குடும்பங்கள் எந்தவித வெற்றியையும் காண முடியாது.

நிதி நிறுவனங்களை வளப்படுத்தி அவர்களை பணக்காரர்களாக மாற்றி அவர்களை விமானங்களில் பறக்கச்செய்பவர்களாக மாற்றுகின்றோமே தவிர எங்களது கிராமத்தில் எந்தவிதமான அபிவிருத்தியையும் காணவில்லை.கிராமம் அபிவிருத்தி காணவேண்டுமானால் எமது இலாபத்தில் இருந்து வட்டியையும் முதலையும் செலுத்துபவர்களாக நாங்கள் மாற்றமடையவேண்டும்.இலாபகரமான தொழிலை சந்தர்ப்பங்கள் மூலமாகவே இனங்காணமுடியும்.

சந்தர்ப்பம் என்பதை நாங்கள் வெளிச்சூழலிலேயே பெறமுடியும்.இன்று மட்டக்களப்பில் பல பெண்கள் சிறுசிறு உற்பத்திகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையுள்ளது.கிராமங்களில் பல வளங்கள் காணப்படுகின்றது.அவற்றில் மாற்றம் செய்து ஏற்றுமதிசெய்வதற்கு எங்களால் முடியும்.அவ்வாறான உற்பத்திகளை ஏற்றுக்கொள்வதற்காக பல நிறுவனங்கள் எங்களுக்குள் இருக்கின்றது.

நாங்கள் நெல்லை களஞ்சியங்களுக்கு வழங்குகின்றோம்.அது பொலநறுவைக்கு சென்று மீண்டும் இங்கு வரும்போது அதிக விலையினை கொடுத்து நாங்கள் அதனை வாங்குகின்றோம்.1500விற்கப்பட்ட நெல் 4500 கொடுத்து விதை நெல்லாக எங்களது நெல்லையே நாங்கள் வாங்கும் நிலையிருக்கின்றது.எங்களது நெல்லை பேணி பாதுகாப்பதற்கான எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.

இங்கிருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளமுடியும்.நாங்கள் இங்கு வேலையில்லை, வேலையில்லையென ஆயிரக்கணக்கானோலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புகின்றோம்.மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கல்வியறிவு அற்றவர்களுக்கு வீட்டு வேலைகளை நாங்கள் செய்கின்றோம்.
தமிழ் சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் வறுமையாகும்.தொழில்முயற்சி இல்லாததே இதற்கு காரணம்.எங்களது பிரதேசத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி ஏதாவது ஒரு தொழில்செய்யவேண்டும்.

இன்று கல்வியை கற்றுவிட்டு அரசாங்கத்திடம் வேலைவாய்ப்பினை கேட்டு நிற்கின்றோம்.அதற்காக நாங்கள் கற்கவில்லை.தொழில் ஒன்றை உருவாக்கவேண்டும்.நேரத்தினை காசாக மாற்றுபவர்களாக நாங்கள் மாறவேண்டும்.