கிழக்கு பட்டதாரிகள் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக போராட முஸ்தீபு

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் அநீதிகள் இழைக்கப்பட்டதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பட்டதாரிகளையும் ஆசிரியர் நியமனத்துக்குள் உள்ளீர்க்குமாறு தெரிவித்தும், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் எதிர்வரும் 20ஆம் திகதியன்று, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் ஏ.ஆர்.எச். அப்துல் ரகுமான் இன்று கருத்து தெரிவித்த அவர்,

“கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகத் தேர்வுக்கு மாவட்ட முதல்நிலைப் புள்ளிகள் அடிப்படையில் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான அநீதிகள் இடம்பெற்றுள்ளன.

“கிழக்கு மாகாண வர்த்தமானி அறிவித்தலின்படி, போட்டிப்பரீட்சையில் இரு பாடங்களிலும் சராசரியாக 40 புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு, அதில் கிடைக்கப் பெறும் மொத்த புள்ளிகளுக்கமைய  மாவட்ட முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

“அத்துடன், 256 நாட்கள் காரைத்தீவில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்குப் பட்டதாரிகளின் பட்டம்பெற்ற ஆண்டு மற்றும் வயது என்பவற்றை கருத்தில்கொண்டு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல், அவர் எங்களுக்கு பாரிய அநீதியை இழைத்துள்ளார்.

“இதனால் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் எவரும் இவ் ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்கப்படவில்லை. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 03 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இப் போட்டிப்பரீட்சையில் 2015, 2016ஆம் ஆண்டு பட்டங்களைப்பெற்ற சுமார் 75 பட்டதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு முந்திய ஆண்டுகளில் பட்டங்களை முடித்த பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்ற ஆண்டு மற்றும் வயதை கவனத்தில்கொண்டு ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறும் கோரி, இந்தக் கண்டனப் பேரணியை  முன்னெடுக்கப்படவுள்ளது” என்றார்.