மட்டக்களப்பில் விபுலானந்தர் மாநாடு ஆரம்பம்

சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் விபுலானந்தர் மாநாடு மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

இந்துகலாசார திணைக்களம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்துகின்றது.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுறை அரங்கில் இந்துகலாசார திணைக்களம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் முன்னாள் இந்துமதவிவகார அமைச்சர் செ.இராஜதுரை,கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் உட்பட மதத்தலைவர்கள்,இந்துக்கலாசார திணைக்கள அதிகாரிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

காலை மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள சுவாமி விபுலானந்தர் சமாதியருகில் இருந்து விபுலானந்தரின் யாழடன் கலைகலாசர நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமானது.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் வரையில் இந்த ஊர்வலம் நடைபெற்றதுடன் ஊர்வலத்தினை தொடர்ந்து விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது.

இன்று காலை ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடானது எதிர்வரும் 07ஆம் திகதி சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.