கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியின் பிரதான நுழை வாயில் அடைக்கப்பட்டு கண்டன ஆர்பாட்டம்

(லியோன்)


மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியின்  பிரதான நுழை வாயில் அடைக்கப்பட்டு  கண்டன  ஆர்பாட்டம்  இன்று முன்னெடுக்கப்பட்டது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம்  ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கல்லூரி அதிபர்  ஒத்துழைப்பு வழங்கினார் என்ற காரணத்தில் அப்பகுதி மக்களால் கடந்த காலங்களில் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன

குறித்த சம்பவத்தின்  காரணமாக கல்லூரி மாணவர்கள் ,பெற்றோர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டங்கள் காரணமாக சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரும் , அதிபரும் வலய கல்வி பணிப்பாளரினால்  இடமாற்றம் செய்யப்பட்டார்கள் .

இதனை தொடர்ந்து கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரிக்கு புதிய   அதிபராக சாந்தகுமார் என்பவர்  நியமிக்கப்பட்டுள்ளார் .

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதிபர் (சபேஷன்) மீண்டும் கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சர்ச்சைக்குரிய அதிபர்  மீண்டும் இக்கல்லூரிக்கு வருவதை கண்டித்து   பாடசாலை மாணவர்கள் . மாணவர்களை பெற்றோர்கள் , கிராம அபிவிருத்தி சங்கு உறுப்பினர்கள் ,மகளிர் அமைப்புக்களின்  உறுப்பினர்கள்  இணைந்து   கல்லூரியின்  பிரதான நுழை வாயில் அடைக்கப்பட்டு    கண்டன ஆர்பாட்டத்தினை இன்று மேற்கொண்டனர் .

இந்த ஆர்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்  தற்போது பாடசாலை கல்வி நிர்வாகம் சீராக செயல்படுகின்ற நிலையில் குறித்த சர்ச்சைக்குரிய அதிபர் மீண்டும் கல்லூரிக்கு வருவதனால் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் , மாணவர்களின் செயல்பாடுகள்  பாதிக்கப்படுவதை  பெற்றோர்களாகிய நாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்க போதில்லை என தெரிவித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று  முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர் . 
   .
குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் கருத்து தெரிவிக்கையில் . தற்போது குறித்த அதிபர் தொடர்பில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு குறித்த அதிபர் இக்கல்லூரிக்கு வருவதை இடை நிறுத்துவதாக தெரிவித்தார் .


மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளுக்காக கல்லூரியின்  பிரதான நுழை வாயில்  திறக்கப்பட்டதுடன் ,பெற்றோர்களினால் மேள்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது