கிழக்கு தொடர்பில் கவனம் செலுத்தாத தமிழரசுக்கட்சி – பாராளுமன்றில் நடந்தது என்ன?

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல் ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. நேற்று புதன்கிழமை இரவு வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவர்கள் சபையை விட்டு வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலை 50 வீதம் தொகுதிவரி முறை மூலமும் 50 வீதம் விகிதாசார முறையின் மூலமும் நடத்தப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருத்தச் சட்டத்தில் 60 வீதம் தொகுதிவரி முறையின் மூலம் என்றும் 40 வீதம் விகிதாசார முறையின் மூலம் எனவும் முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையகக் கட்சிகள் நேற்று மாலை அவசர அவசரமாக அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி 50க்கு 50 என மாற்றம் செய்துள்ளனர்.

இவ்வாறு மாற்றம் செய்வதற்கான பேச்சுக்களில் தமிழரசுக் கட்சி கலந்துகொண்டது. ஆனாலும் அரசாங்கம் முன்னர் பரிந்துரைத்த 60க்கு 40 என்ற முறையை ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கியதாக எமது செய்தியாளர் கூறினார்.

முஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி இந்த மாற்றத்தை செய்திருக்கவில்லையானால் வடக்கு கிழக்கில் குறிப்பாக கிழக்கில் மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் பிரதேசங்களில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி கண்ணை மூடிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்த சட்டமூலத்திற்கு 154 வாக்குகள் ஆதரவாகவும் 43 வாக்குகள் எதிராகவும் பெறப்பட்டன. கூட்டு எதிர்கட்சியும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானம் வழங்கியுள்ள நிலையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் படி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது.