முனைக்காட்டில் உதைபந்தாட்ட திருவிழா சம்பியனானது மட்டக்களப்பு புளியந்தீவு பாடுமீன் கழகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பகுதியின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காட்டில் நடைபெற்ற உதைபந்தாட்ட திருவிழாவில் மட்டக்களப்பு புளியந்தீவு பாடுமீன் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

முனைக்காடு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் தனது 48வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உயிரிழந்த உறவுகள் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட தொடரை ஆரம்பித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 26 விளையாட்டுக்கழகங்கள் இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதுடன் நொக்கவுட் முறையில் இந்த போட்டிகள் நடைபெற்றுவந்தன.

இதனடிப்படையில்இறுதிப்போட்டியில் மாங்காடு இளைஞர் அணியும் மட்டக்களப்பு புளியந்தீவு பாடுமீன் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது.விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 2.0என்ற கணக்கில் மட்டக்களப்பு புளியந்தீவு பாடுமீன் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக முடிசூடிக்கொண்டது.

விளையாட்டு நிகழ்வினை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் கு.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் விசேட அதிதியாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் ரி.யோகானந்தராஜா கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பிரதேச கிராம சேவையாளர் கே.சாந்தலிங்கம்,முனைக்காடு விநாயகர் வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கேடயங்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் சிறந்த வீரர்களும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் பிரதம அதிதியாக அழைப்பிதழில் குறிக்கப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.

முனைக்காடு விளையாட்டு மைதானம் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்டு குறித்த பகுதி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அந்த மைதானத்தில் நடாத்தப்படும் போட்டிகளுக்கு சந்திரகாந்தனை பிரதம அதிதியாக அழைக்கும் வழக்கத்தினை குறித்த கழகத்தினர் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.