முடிவின்றி தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 109நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழில் உரிமையினை வழங்க கோரி பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தினை வேலையற்ற பட்டதாரிகள் இரவு பகலாக மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் தமது போராட்டம் தொடர்பில் மத்திய மாகாண அரசாங்கள் தொழில் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் நிலையில் அது தொடர்பான உறுதி மொழிகள் எதுவும் தமக்கு வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாம் ஏமாற்றப்படுகின்றோமா என்ற சந்தேகமும் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது தொழில் தொடர்பில் உறுதியான நடவடிக்கையினை மத்திய மாகாண அரசாங்கள் எடுத்திருந்தால் அது தொடர்பில் உறுதியளிப்பதற்கு தயங்குவது ஏன் எனவும் பட்டதாரிகள் கேள்வியெழுப்புகின்றனர்.

எவ்வாறாயினும் ஓரிரு தினங்களில் தமக்கான உறுதியை மத்திய மாகாண அரசாங்கள் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.