News Update :
Home » » சி .வி விக்னேஸ்வரனை தமிழீழ மக்கள் நன்றி உணர்வோடு பார்க்கிறார்கள்.

சி .வி விக்னேஸ்வரனை தமிழீழ மக்கள் நன்றி உணர்வோடு பார்க்கிறார்கள்.

Penulis : Nithakaran Maruthy on Monday, June 19, 2017 | 5:28 PM

தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு  தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன் அவர்களை உலகமெங்கும் பரவி வாழும் தமிழீழ மக்கள் நன்றி உணர்வோடு பார்க்கிறார்கள், அவர்மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவர முயன்ற தமிழரசுக்கட்சியை அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள் ,
என்கிறார் தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கிவரும் இந்திய ஈழத்தமிழர் நட்புறவு இயக்கத்தின் தலைவர் காசி ஆனந்தன் .
அண்மையில் வெளியாகி உள்ள ஓர் அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறி இருப்பதாவது , –
தந்தை செல்வாவின் தலைமையில் அறப்போராட்ட காலத்திலும் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்ட காலத்திலும் தமிழீழ விடுதலைக்காக போராடிவந்த விடுதலைப் பேராற்றல் இன்று உலகமெங்கும் பரவி பல அமைப்புக்கள் வடிவத்திலும் ,பல முனைகளிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதைபார்க்கின்றோம்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மிக நெருக்கடியான இக்காலகட்டத்தில் தமிழர் தாயகமான தமிழீழ மண்ணில் நம்பிக்கைக்கு உரிய ஒரு தலைவராக விக்னேஸ்வரன் அவர்கள் விளங்குகின்றார் .
தமிழரசுக்கட்சியில் இப்போது கொழும்பு தமிழரசுக்கட்சி ,தமிழீழ தமிழரசுக்கட்சி என்று இரண்டு தமிழரசு கட்சிகளை பார்க்கின்றோம் .
கொழும்பு தமிழரசுக்கட்சி சிங்களவர்களுக்கு நோகாமல் தமிழர் நலன்களை கவனிக்க வேண்டும் எனும் கொள்கை உடையது.
அடிக்கிறவனுக்கு ,உதைக்கிறவனுக்கு நோகாமல் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறது அக்கட்சி.
பெற்றுக்கொள்வதற்காக   தந்தை செல்வாவால் தொடக்கப்பட்ட கட்சி  நேற்றிருந்த தமிழரசுக் கட்சி,
விட்டுக்கொடுப்பதற்க்காக சுமந்திரன் ,சம்பந்தன் கூட்டம்;  நடத்திக்கொண்டிருக்கும் கட்சி இன்றுள்ள தமிழரசுக்கட்சி
தமிழீழத்தை நிலையாகப் பெற்றுக் கொள்வதற்காகவே தந்தை செல்வா தமிழீழ தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஆனால் சம்பந்தரோ முள்ளிவாய்க்கால் பேரவலம்  முடிந்த மறுகணமே தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று பறை சாற்றினர்.
பாழ்பட்டுக்கிடக்கும் இன்றைய அரசியல் சூழலில்தான் நன்றியுணர்வோடு நாம் விக்னேஸ்வரன் அவர்களை பார்க்கின்றோம் .
கொழும்பில் வளர்ந்து வாழ்ந்து வந்த விக்னேஸ்வரன் தமிழீழ மண்ணை காப்பாற்ற துடிக்கிறார்.
தமிழீழ மண்ணில் வளர்ந்து வாழ்ந்து வந்த சம்பந்தர் கொழும்பை காப்பாற்ற துடிக்கிறார்.
தமிழீழத்தில் நடைபெறுவது இன அழிப்பு என்று சி .வி விக்னேஸ்வரன் ( தமிழீழ தமிழரசுக் கட்சி) சொல்கிறது ,
தமிழீழத்தில் நடைபெறுவது நல்லாட்சி என்று கொழும்பு தமிழரசுக் கட்சி (சுமந்திரன் ,சம்பந்தன்) சொல்கிறது.
பிரபாகரன் தமிழர்களின் போற்றுதலுக்கு உரிய ஒரு தலைவன் என்று தமிழீழ மண்ணில் தேர்தல் மேடைகளில் சொன்னார்  விக்கினேஸ்வரன்
பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று இந்தியாவில் இருந்து வெளிவரும் வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அறிக்கை விடுகிறார் சம்பந்தர் .
(சி .வி விக்னேஸ்வரன் ) தமிழீழ தமிழரசுக் கட்சி வடமாகாண சபையில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மானம் இயற்றுகின்றது.
கொழும்பு தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுமந்திரன்  விசாரணை எல்லாம் முடிந்து விட்டது என அறிக்கை விடுகிறார்.
தமிழீழ மண்ணின் விடுதலை உணர்வு மழுங்காத வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் முடிவுகளும் நடவடிக்கைகளும் அமைந்திருப்பதால் தமிழீழ மக்கள் இன்று அவரை தலைமேல் வைத்துப் போற்றுகின்றனர் .
கொழும்பு தமிழரசுக்கட்சியின் கொள்கை குழம்பிய தலைவர்களுக்கு ஒன்றை மட்டும் பணிவோடு கூறிக்கொள்வேன்.
முள்ளிவாய்க்காளோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று கொழும்பு சொல்வதை நம்பி ஏமாந்துபோகாதீர்கள்.  முகங்கொடுக்கும் எரிமலை நெருப்புக்கு முன் காலம் திடீரென உங்கள் எதிரில் மீண்டும் எழும் அதுவரை தங்களை விடுதலை வேள்வியில் இரையாக்கிய மாவீரர்களின் தமிழீழ விடுதலை உயிர் மூச்சை மிதிக்காதீர்கள்.
போராட்ட களம் அமைத்து முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்களுக்காக முழுவீச்சோடு களம் இறங்கிய மாணவர்களை,இளைஞர்களை மக்களை போற்றுகின்றேன்.
-காசி ஆனந்தன்-
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger