ஜனாதிபதி,எதிர்க்கட்சி தலைவர்களிடம் பட்டதாரிகளின் பிரச்சினையை முழுமையாக கொண்டுசெல்லாதது கவலைக்குரியது

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரிடம் தமது பிரச்சினைகள் முழுமையாக கொண்டுசெல்லப்படாதது கவலைக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரக போராட்டம் 72வது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது.

இரவு பகல் பாராது தமது தொழில் உரிமைக்காக வீதியில் கிடந்து இந்த போராட்டத்தினை பட்டதாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் போராட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உறுதியளித்துள்ள நிலையில் அதனை விரைவுபடுத்தவேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாங்கள் இரண்டு மாதங்களை கடந்து போராட்டம் நடாத்திவரும் நிலையில் தமது பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு உரிய தரப்பினர் கொண்டுசெல்லாதது கவலைக்குரியது எனவும் பட்டதாரிகள் தெரிவிததனர்.