வேலையற்ற பட்டதாரிகள் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வாயில் கறுப்பு துணி அணிந்துகொண்டு அமைதி வழியிலான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று பிற்பகல் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 93வது நாளாகவும் இன்று புதன்கிழமையும் இடம்பெற்றது.

சிறைச்சாலையுடன் தொடரும் 93ஆம் நாள் போராட்டம் என்னும் தலைப்பில் இன்றைய சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் உட்பட நான்கு பேரையும் விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.

பல வலிகளையும் வேதனைகளையும் சுமந்தே கடந்த 93 நாட்களாக போராடிவரும் நிலையில் பட்டதாரிகள் மன உளைச்சலுக்கும் மன அழுத்தங்களுக்கும் உட்பட்டுள்ளதாகவும் அதன்காரணமாகவே கடந்த 25ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் இடம்பெற்ற முற்றுகை போராட்டத்தின்போது அசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

நீதித்துறை இதனையொரு குற்றமாக பார்க்காது மனிதாபிமானத்துடன் உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் குறித்த சம்பவம் தொடர்பில் அனைத்து பட்டதாரிகளும் பகிரங்க மன்னிப்பினை கோருவதாகவும் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஏற்பாட்டாளர் தென்னான ஞானானந்த தேரர் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிங்கள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் உட்பட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 25ஆம் திகதி கிழக்குமாகாணசபையினை முற்றுகையிட்டு வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை அவமதிக்கப்பட்டதாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குறித்த நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.