மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற வேலைத்திட்டங்கள் தேசிய ரீதியில் விருது வழங்கி கெளரவிப்பு.

நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம் பெற்ற இளைஞர் தின பரிசளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊருக்கு ஒரு கோடீ வேலைத்திட்டத்தில் வெற்றி பெற்ற மூன்று  வேலைத்திட்டங்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவு, மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகள் முறையே முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்களை மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக பெற்றுக்கொண்டமைக்காக  விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

கடந்த 2016ம் வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊருக்கு ஒருகோடி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன .

இந்த வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்ற மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் செய்து முடிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் புனரமைப்பு மற்றும் களஞ்சியறை நிர்மானிப்பு வேலைத்திட்டம் மாவட் ரீதியாக முதலாவது இடத்தினை பெற்றுக் கொண்டமைக்காக விருதினை இளைஞர் சேவை அதிகாரி வி.தருமரெத்தினம் பெற்றுக் கொண்டார்.

அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவு மகிழுர் கிராமத்தில் ஆலய மண்டபம் அமைத்தல் வேலைத்திட்டம் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொண்டமைக்கான விருதினை இளைஞர் சேவை அதிகாரி கே.சதீஸ்வரி பெற்றுக் கொண்டார்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நூலக கட்டிடம் அமைத்தல் வேலைத்திட்டம் மாவட்ட ரீதியில் மூன்றாவது இடத்தினை பெற்றமைக்காக இளைஞர் சேவை அதிகாரி த.விந்தியன்  விருதினை பெற்றுக் கொண்டார்.

இந்த இளைஞர் தின பரிசளிப்பு நிகழ்வில் கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் ஏறந்திக்க வெலியங்கே, மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர்கள், உதவிப்பணிப்பாளர்கள் உத்தியோகஸ்தர்கள்,  இளைஞர் யுவதிகள்  என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.