தமிழர் தாயகத்தில் மதுபான உற்பத்திச்சாலை - தடுத்து நிறுத்தப்படுமா?

தமிழர்களின் தாயகப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு அனுமதியளிக்ககூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்திசாலையினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொடுவாமடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மதுவால் சீரழிந்துவரும் நிலையில் மதுபான உற்பத்திசாலையினை அமைத்து மேலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவம் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யுத்ததினால் சீரழிந்துபோயுள்ள பகுதிகளை இதுவரையில் கட்டியெழுப்ப நடவடிக்கையெடுக்காத இந்த நல்லாட்சி அரசாங்கம் மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு மட்டும் அக்கரையெடுப்பதன் நோக்கம் என்ன?என்றும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்;டத்தில் மதுபாவனையினை குறைக்கவேண்டும் மதுபான விற்பனை நிலையத்தினை கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் எல்லாத்திற்கும் முத்தாப்பு வைத்தது போன்று மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதானது மட்டக்களப்பினை சீரழிக்கும் நடவடிக்கையென மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமது பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பிலும் விவசாயிகளின் நன்மை தொடர்பிலும் அக்கரை செலுத்தாத சில அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதில் அக்கரை செலுத்திவருவது தொடர்பிலும் மக்கள் கவலை தெரிவித்தனர்.

குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதை தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறிய கிழக்குமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தபோதிலும் அது தொடர்பில் இன்றுவரை அமைதி காப்பது தொடர்பிலும் மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இதேநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டார்.