அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியாவிட்டால் மக்களுடன் இணைந்து போராட வாருங்கள் -பட்டதாரிகள் அழைப்பு

தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் பாராமுகமாக இருப்பது பிரஜைகள் மீது அரசாங்கம் வைத்துள்ள அலட்சிய போக்கினையே காட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 66வது நாளாகவும் இன்று வியாழக்கிழமை நடைபெற்றுவருகின்றது.

தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பாக இரவு பகலாக தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுகொண்டுவருகின்றனர்.

தமது நியாயமான போராட்டத்திற்கு இதுவரையில் உறுதியான பதில்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்கொண்டுசெல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.

இந்தவேளையில் இன்று நடைபெறும் காணாமல்போன உறவினர்களின் ஹர்த்தல் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ள அவர்கள் அவர்களின் நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த ஆட்சிக்காலத்திலும் வீதியில் இறங்கி மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் அது தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக இருப்பது அவர்கள் பிரஜைகள் மீது வைத்துள்ள அலட்சியப்போக்கினையே காட்டுவதாக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

இன்று காhணமல்போனவர்களின் உறவினர்கள்,பட்டதாரிகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,நிலமீட்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே இந்த நல்லாட்சியை நாங்கள் ஏற்படுத்தினோம்.ஆனால் இதுவரையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.மீதோட்ட குப்பை பிரச்சினையை தீர்க்குமாறு அந்த மக்கள் 2011ஆம் ஆண்டில் இருந்துபோராடிவருகின்றனர்.அந்த போராட்;டம் அடக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுடன் குப்பைகள் கொட்டப்பட்டன.இன்று பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் பின்னரே அந்த மக்கள் எதற்காகபோராடினார்கள் என்று உணர்ந்துள்ளனர்.

அதுபோன்றே இந்த பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினைப்பெறுவதற்கு எத்தனை உயிர்கள் தேவையென்பது கேள்விக்குறியாகவுள்ளது.இன்று நடைபெறும் ஹர்த்தால் போராட்டமானது இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையினையே வெளிப்படுத்துகின்றது.

துமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் பாராமுகமாக இருக்காமல் அரசுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்.எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு அரசுக்கு தலைசாய்ந்துகொண்டிருக்காமல் அழுத்தங்களை வழங்கவேண்டும்.இல்லாவிட்டால் மக்களுடன் வீதியில் இறங்கி அவர்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார்.