சொப்பன சுந்தரிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பெண் அமைச்சர் ஒருவரின் செயற்பாட்டினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலபதி தூசண வார்த்தைகளினால் திட்டியதுடன் தமிழர்களையும் கேவலப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று புதன்கிழமை 65வது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் பட்டதாரிகளையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவது கலபதி தெரிவித்தாக கூறி அவரது உருவப்பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வியறிவில்லாதவர்களை அமைச்சர்களாக நியமித்து எங்களை இழிவுபடுத்தும் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நமது மாகாணசபையில் ஒரு சொப்பன சுந்தரி,தமிழ் இனத்தின் பிறப்பினை கேவலப்படுத்திய காச்சல்காரி,அரசசபையாக மாறிக்கொண்டிருக்கும் மாகாணசபை போன்ற பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் குறித்த மாகாணசபை உறுப்பினருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.