இது நல்ல மாற்றத்திற்கான ஆரம்பம்.

(சசி துறையூர்)
திருகோணமலை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புரய நிகழ்வின் இரண்டாவது நாளில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் அழைப்பை ஏற்று விருந்தினராக கலந்து கொண்டார் மண்முனை மேற்கு பிரதேச சபையினுடைய செயலாளர்  செல்வி ரி. புத்திரசிகாமணி.

திருகோணமலை நகரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 6000 உள்நாட்டு வெளிநாட்டு இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் கடந்த 29.03.2017 தொடக்கம் யொவுன்புரய வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.

எட்டாவது யொவுன்புரய பூமிக்கு வருகை தந்த செயலாளர் அம்மணி அவர்கள் யொவுன் புரய வாசிகளான மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்யுவதிகளுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் கண்காட்சி கூடங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களையும் பார்வையிட்டார்.

இளைஞர்கள் மத்தியில் அவர் பேசும் போது இந்த வாய்ப்பு இளைஞர்களுக்கு அரிய சந்தர்ப்பம் உடல் உள ரீதியாக நல்ல மனோநிலை மாற்றம், சாவல்களுக்கு முகம் கொடுப்பதற்கான சிறந்த அனுபவ பகிர்வுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக இது போன்ற வேலைத்திட்டங்கள் தான் எமது இளைஞர்களுக்கும் நாட்டுக்கும் தேவை மூவினத்தவரும் இன மத மொழி பேதமின்றி ஒரே இடத்தில் தங்கியிருந்து சமைத்துண்டு போட்டிகளில் பங்குபற்றி களியாட்டங்களில் ஈடுபடுவது என்பது பயன்மிக்கது ஆரோக்கியமானது. கூட்டுறவு ஒற்றுமை சகோதரத்துவம் வலுப்பெறும். எனவும் பங்குபற்றிய இளைஞர்களுக்கு தனது வாழ்த்தினையும் ஆசிர்வாதத்தினையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

வேலைத்திட்டம் எதிர்வரும் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.