தமது கோரிக்கைகளுக்கான நியாயமான தீர்வு எழுத்துமூலமாக கிடைக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் -மட்டு.வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எழுத்துமூலமாக வழங்கப்படும்போதே தமது போராட்டம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரக போராட்டம் 23வது நாளாகவும் இன்று புதன்கிழமையும் தொடர்கின்றது.

இந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் தலைமையில் விசேட கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை திறைசேரியில் நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிந்த இந்த கூட்டம் நிறைவுபெற்றதும் தமக்கு திருப்திகரமான பதில் அளிக்கப்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் தமது நிலை தொடர்பில் வரவேற்றுள்ள அவர் தமது நியாயமான கோரிக்கைக்கு சிறந்த முடிவினை எழுத்துமூலம் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகள் சிலர் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டுவருவதை கடுமையாக விமர்சித்துள்ள அவர்கள் பாராளுமன்றம் சென்ற இவர்கள் வேலையற்ற இளைஞர் யுவதிகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன என்றும் வேலையற்ற பட்டதாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

வடகிழக்கு பிரதேசம் என்பது யுத்ததினால் பாதிக்ககப்பட்ட பகுதி.மிகவும் கஸ்டத்தின் மத்தியிலேயே கல்வியை தொடர்ந்து பல்கலைக்கழகம் சென்று கல்வியை நிறைவுசெய்து பட்டம்பெற்றனர்.வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாணவர்கள் சுதந்திரமாக கல்வியை தொடர்ந்தனர் என்பதையும் இவர்கள் உணரவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வடகிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகளினால் என்ன வேலைவாய்ப்பு துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ள நிலையில் அது தொடர்பில் அவர்கள் பேசுவது கேலிக்குரியது எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

23வது நாள் கடும் மழைக்கு மத்தியில் பெருமளவான வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.