திணைக்களங்கள் விழிப்பாக செயற்படுகின்றன –பிரதியமைச்சர் அமீர்அலி

இந்த நல்லாட்சியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு செல்லவேண்டும் என்ற அனைத்து திணைக்களங்களும் விழிப்பாக செயற்படுவதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறிய விவசாய உற்பத்தியாளர்களுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

விவசாய நடவடிக்கைகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலும் சிறிய விவசாயிகளை அத்துறையில் மேம்படுத்தும் வகையிலும் இந்த நீர்ப்பம்பிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 102 விவசாயிகளுக்கு இந்த நீர்ப்பம்பிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கென் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 15 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.