டெங்கினை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் குழுக்களை அமைக்க தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்கள் அனைத்திலும் விசேட குழுக்களை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஒன்றான களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

2017ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் இந்த கூட்டத்தில் அதிகளவு டெங்கு தாக்கத்திற்குள்ளாகும் பகுதியாக களுவாஞ்சிகுடி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதுவரையில் 74 பேர் டெங்கின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தினமும் ஆறு ஏழு பேர் களுவாஞ்சிகுடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் இங்கு வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வினையும் டெங்கு நுளம்பு பெருகும் இடத்தினை கண்டுபிடித்து அவற்றினை தூய்மைப்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் குழுக்களை அமைப்பது எனவும் அவற்றில் கிராமசேவையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பொலிஸார்,பொது அமைப்புகளின் உறுப்பினர்களைக்கொண்டதாக அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கிணறுகளை வலைகளினால் மூடுவதற்கான நடவடிக்கை எடுப்பது எனவும் நுளம்பு பெருக்கம் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளை துப்புரவுசெய்யுமாறும் பணிப்புரைகள் பிரதேசசபை மற்றும் பொது அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டது.