களுவாஞ்சிகுடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,களுதாவளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக்கண்டித்து களுவாஞ்சிகுடியில் ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது.


 இன்று வெள்ளிக்கிழமை காலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலையருகே ஒன்றுகூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

பட்டிருப்பு தமிழ் சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொணடனர்.

பிரதிப்பணிப்பாளர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சூத்திரதாரிகளை உடனடியாக கைதுசெய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி தமிழ் சமூகத்தின் இணைப்பாளருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்.பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது அன்று மதிதயன் இன்று விமல்ராஜ் நாளை..?,துப்பாக்கிதாரிகளை கைதுசெய் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.