உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம், உழவர் திருநாளில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பிரமாண்டமான முறையில் பொங்கல் விழா.

(சசி துறையூர்)          மட்டக்களப்பு  மெதடிஸ்த
மத்திய கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின்  முதலாவது
பாரம்பரிய தைப்பொங்கல்
விழா.

உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம், உழவர் திருநாளில் மட்டக்களப்பு
மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் பிரமாண்டமான முறையில் முதலாவது தடவையாக  பாரம்பரிய தைப்பொங்கல்
விழா ஒன்றினை வரும்
ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் பதில் பொதுச் செயலாளரும், விழா ஏற்பாட்டு குழுவின் உறுப்பினருமான  ந.துஷ்யனதன் தெரிவித்தார்.

 காலை 07.00 மணிக்கு   ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தின் அருகில் உள்ள சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகும் பவனி பொங்கல்
பொருட்களை சுமந்த மாட்டு வண்டில் பவனி, உழவர்
நடனம், கோலாட்டம் மற்றும் இன்னியம் உள்ளிட்ட தமிழர்
பாரம்பரிய பண்பாட்டு இசை முழக்கம் கலாசார என்பன சகிதம் நடைபெறவுள்ளது.

பவனி மண்டபத்தை அடைந்து 08.00 மணி முதல் பண்பாட்டு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.

வெண் பொங்கல், சக்கரை பொங்கல், அவல் பொங்கல், கற்கண்டு பொங்கல், பணங்கட்டி பொங்கல், மிளகுபொங்கல், ரவை பொங்கல் ஆகிய ஏழு வகையான பொங்களுடன் 17 வகையான பாரம்பரிய பட்சணங்களும் அவ்விடத்திலே தயாரிக்கப்படவுள்ளன.

 அதனைத் தொடர்ந்து
பாடசாலை வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களிடையே
பாரம்பரிய விளையாட்டுக்களான கிடுகிழைதல், கோலம்போடுதல், நிறமுட்டி உடைத்தல், கரும்புரித்தல்  பூமாலை கட்டுதல் ஆகிய போட்டிகளுடன், குடும்பத்தினருக்கான
கருத்தாடல், கோலாட்டம், நாட்டார் பாடல்கள்,
வில்லுப்பாட்டு, நாடகம், பேச்சு, காவியம் பாடுதல்.
கவியரங்கம், மற்றும் கலாசார நடனம் என்பன
நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு  நகரில் முதன் முதலாக நடைபெறும் இந்த பிரமாண்டமான நிகழ்வில் மட்டக்களப்பு  மெதடிஸ்த
மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பதுடன்,  விழா ஏற்பாட்டு குழுவால் பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளதோடு தமிழர் பாரம்பரியங்களை பறைசாற்றும் அலங்காரங்களும்  போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.