மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம்! - புத்திஜீவிகளை துறைசார்ந்தவர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு

மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்புக்கு அமைய நேற்றையதினம்(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் அமைப்புக்கான இடைக்கால நிர்வாகம் ஒன்றும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்திற்கான யாப்பு உள்ளிட்ட செயற்றிட்ட வரைவு ஒன்றை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த இடைக்கால நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ம் திகதிவரை இயங்கும் என்றும் அதன் பின்னர் மேலும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு நிரந்தரமான புதிய நிர்வாகம் ஒன்று அமைக்கப்படுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 21 பேர் அடங்கிய தற்காலிக மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் தற்காலிக தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கான யாப்பு ஒன்றிணை உருவாக்குவதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய குழு உறுப்பினர்கள்

வைத்தியர் எம்.முருகமூர்த்தி(மட்டக்களப்பு வைத்திய நிபுணர்) கலாநிதி ஜெ.கனடி(கிழக்குப்பல்கலைகழக விரிவுரையாளர்) வைத்தியர் கே.இ.கருணாகரன்(மட்டக்களப்பு வைத்திய நிபுணர் பதில் உபவேந்தர்) கே.குருநாதன்(காணி நிபுணத்துவ ஆலோசகர் முன்னாள் காணி ஆணையாளர்) எஸ்.விஜயகுமார்(சட்டத்தரணி) வி.மகேந்திரநாதன்(பிரதி ஆணையாளர்,உள்நாட்டு இறைவரி திணைக்களம்) எஸ்.நிலாந்தன்(ஊடகவியலாளர்) வி.கிருஸ்ணகுமார்(ஊடவியலாளர்) எ.இருதயநாதன் பா.பரசுராமன் எஸ்.சிவயோகநாதன் எஸ்.கணேசலிங்கம் பி.முரளிதரன் கு.ஜெகனீதன் எஸ்.ராஜன் கே.விநாயகமூர்த்தி எஸ்.பரமானந்தன்(ஒலியன் மாற்றுதிரனாளிகள் அமைப்பு) ஆர்.ருத்திராதேவி பா.ராகினி பி.சிறானி எஸ்.சோமாவதி பாலகங்கேஸ்வரி.

தற்காலிக நிர்வாகம்

தலைவர் - எஸ்.விஜயகுமார்(சட்டத்தரணி)
செயலாளர் - எஸ்.ராஜன்
பொருளாளர் - எஸ்.நிலாந்தன்(ஊடகவியலாளர்)

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள்

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக்காயில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தல்.

மாவட்டத்தில் பறிபோய்கொண்டிருக்கும் காணி அபகரிப்பை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

இலங்கையின் இன்றை அரசியல் சூழ்நிலை குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

தமிழ் மக்களின் அதிகார பகிர்வு உரிமைகளை வலியுறுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்,தமிழர்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முனனெடுப்பது,தமிழ் மக்களின்  கல்வி பொருளாதரம் போன்ற விடயங்களை அபிவிருத்தி செய்தல்,முன்னால் பேராளிகள் காணாமல்போனோர் மாற்றுத்திரனாளிகள் சிறுவர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரம் உரிமைகளுக்கான வேலைத்திட்டங்களை உருவாக்குதல்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் சமூக ஆர்வலர்களை பொதுமக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒருமித்த மக்கள் குரலாக செயற்படுவது என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.

ஒன்றியத்தில் இணைவதற்கான அழைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின்; ஊடாக மாவட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மாவட்டத்தில் அக்கறை கொண்ட புததி;ஜீவிகள் துறைசார்ந்த நிபுணர்கள் சமூகசேவை அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் எதிர்வரும் பெப்ரவரி 18 ம் திகதிக்கு முன்னர் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கின்றோம்.

தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் கட்சி அரசியலுக்கு அப்பால் எமது எதிர்கால சந்ததியின் இருப்பை பாதுகாக்க மாவட்டத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு ஒன்றியம் அழைப்பு விடுக்கின்றது.

அவன் அப்படிச் சொல்வான் இவன் கோபித்துக் கொள்வான் என்று ஒதுங்கி நிற்காதீர்கள் ஒதுங்கி நின்று தனித்து நின்று சாதித்தது ஒன்றுமில்லை வீரம் விளைநிலம் இன்று விலைபேசப்படுகின்றது. இனியும் விழித்துக்கொள்ளாது தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவும் பதவி பட்டத்திற்காகவும் நாம் தமிழர்களாக ஒன்றுபட மறுப்போமானால் நம்மை நாமே அழித்துக்கொண்டு எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அழித்துவருகின்றோம் என்பதை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் ஒன்றிணையுமாறு புரிந்துகொண்டு செயற்பட முன்வாருங்கள்.

நாளை நமது பிள்ளை வாழவேண்டுமென்றால் மட்டக்களப்பின் இருப்பை நாம் தக்கவைக்க வேண்டும் அதற்காக ஒன்றிணையுங்கள்.மாவட்டத்திற்கான சிவில் சமூக அமைப்பு என்ற ரீதியில் இதில் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கலந்துகொண்டு சேவைசெய்யமுடியும்.

நாம் ஒதுங்கி நிற்போமாக இருந்தால் நமது இருப்பை நாம் இழக்கநேரிடும் இன்னுமொரு இனத்திடம் நமது பிள்ளை அடிமையாக வாழவேண்டி ஏற்படும் எனவே சிந்தியுங்கள் செயற்படுங்கள் ஒன்றுபடுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












"