பொலிஸார் மக்களில் ஒருவர் என்ற நிலை ஏற்படுத்தப்படுத்த நடவடிக்கை - முன்னாள் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.அரசரெட்னம்

பொதுமக்கள் பொலிஸாரைக்கண்டு ஒதுங்கி செல்லும் நிலையினை மாற்றி பொலிஸார் மக்களில் ஒருவர் என்ற நிலையினை ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரஜைகள் சமூக தொடர்பு பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற முன்னாள் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.அரசரெட்னம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் உறவினை கட்டியெழுப்பும் வகையில் சமூக தொடர்பு பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக ஓய்வுபெற்ற முன்னாள் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.அரசரெட்னம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இந்த அலுவலகம் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.கருணாரட்ன ஆகியோர் கலந்துகொண்டு திறந்துவைத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் உறவினை விருத்திசெய்யும் வகையில் இந்த புதிய பிரிவு பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பாக ஓய்வுபெற்ற முன்னாள் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.அரசரெட்னம்,கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு  இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்னம்,

பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் உறவுகள் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளது.குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பொலிஸ் தொடர்பான நம்பிக்கையீனமே அதிகளவில் காணப்படுகின்றது.

பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே குற்றச்செயல்களை கட்டுப்படுத்தமுடிவதுடன் பொதுமக்கள் சுதந்திரமாக தமது கடமைகளை செய்யமுடியும்.
அதனடிப்படையில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களினால் இந்த பிரிவு உருவாக்கப்பட்டதுடன் அதற்காக கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக என்னை நியமித்துள்ளார்.

இந்த நிலையத்தின் மூலம் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.சட்டம் ஓழுங்கை பேணுவதற்கும் போதைவஸ்து பாவனையினை கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களின் உதவிகளைப்பெற்றுக்கொள்வதுடன் பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் சாரதிகள்,பாதசாரிகள்,மாணவர்களிடையேயான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.அதற்காக பொதுமக்களின் உதவியை நாங்கங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அத்துடன் பல்வேறு தேவைகள் நிமித்தம் பொலிஸ் நிலையங்களுக்கு செல்லும் தமிழ் பேசும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கினால் அது தொடர்பில் என்னிடம் நேரடியாக முறையிடுவதன் மூலம் அது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைபெற்றுக்கொடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.