கிழக்கு பல்கலைக்கழக 10 மாணவர்களுக்கும் பிணை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட 10 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸாரினால் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின்போது குறித்த 10 மாணவர்களையும் தலா ஒருவர் ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையில் செல்ல அனுமதிதத்ததுடன் எதிர்வரும் 27ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் ஈ.கருணாகரனினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த நான்கு தினங்களாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி கோரி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகப் பேரவைக் கட்டடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக கூறி இந்த முறைப்பாடு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரணைசெய்த ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இரு தரப்பினரிடையேயும் சமாதான நிலையை ஏற்படுத்த முற்பட்டபோதும் எழுந்த முரண்பாடுகள் காரணமாக வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்றில் நடைபெறும் என்ற உத்தரவினை பிறப்பித்தார்.

இந்த வழக்கின்போது பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சட்டத்தரணி திருமதி சுலோக்சனும் மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி சண்முகமும் ஆஜராகியிருந்தனர்.