குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் (களுவாஞ்சிகுடி)பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் ஸ்ரீகிருஸ்ணன் ஆலயத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களினால் நியமிக்கப்பட்ட ஆலய நிர்வாகத்தினை பிரதேச செயலாளர் சிலரின் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கு ஏற்றாற்போல் மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த ஆலய நிர்வாகசபையில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் இந்த ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டதுடன் இந்த ஆண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் புதிய நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக தற்போதைய ஆலயத்தின் தலைவர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.

இந்த ஆண்டுதான் ஆலயம் கும்பாபிசேகம் செய்யப்பட்டு சிறந்தமுறையில் கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஆனால் அதனை குழப்பும் வகையில் கடந்த நிர்வாகத்தில் இருந்தவர்கள் செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளபோதிலும் பிரதேச செயலாளர் ஒருபக்க சார்பாக செயற்பட்டு பொதுமக்களின் ஆணையை மீறி பிரதேச செயலகத்தில் புதிய நிர்வாகத்தினை அமைப்பதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அதில் தமது நிர்வாகம் கலந்துகொள்ளாமல் பகிஸ்கரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

புதிய நிர்வாக ஆலயத்தின் யாப்பினை மீறி தன்னிச்சையாக செயற்படுவதன் காரணமாக மக்கள் அந்த நிர்வாகத்திற்கு எதிராக செயற்படவேண்டிய நிலையேற்பட்டதாக ஸ்ரீகிருஸ்ணன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் க.ஞானரெத்தினம் தெரிவித்தார்.

கடந்த நிர்வாகத்தின் தலைவராக இருந்து பொதுக்கூட்டத்தின் இறுதியில் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே புதிய நிர்வாகம் தெரிவுசேய்யப்பட்டதுடன் தாம் எந்த மோசடியும் இடம்பெறவில்லையெனவும் தெரிவித்தார்.

இதேவேளை ஆலயத்திற்கான புதிய நிர்வாகம் அமைப்பது மற்றும் ஆலயத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஆலயத்தில் இதுவரையிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா மு.கோபாலரட்ணம் தெரிவித்தார்.