மட்டக்களப்பில் முதன்முறையாக ஹொக்கி விளையாட்டு அறிமுகம் -கோலாகலமாக நடைபெற்ற நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஹொக்கி விளையாட்டு அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஹொக்கி சங்கத்தின் அனுசரணையுடன் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹொக்கி விளையாட்டுத்துறையினை அறிமுகம் செய்யும் வகையிலும் ஹொக்கி மாவட்ட சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் நேற்று மாலை வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை ஹொக்க சங்கத்தின் தலைவரும் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் முயற்சியினால் மட்டக்களப்பு கல்வி வலயம் மற்றும் விளையாட்டுக்கழகஙகளின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஹொக்கி சங்கத்தின் தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சர் கே.பி.கீர்த்திரத்தின பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக விமானப்படையின் கட்டளை அதிகாரி ஹெட்டியராட்சி,மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமான மா.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தேர்தல் அத்தியட்சர் சசீலன் மட்ட்ககளப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கலாசார அணிவகுப்புடன் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹொக்கி அணி வீர,வீராங்கனைகள் அழைத்துவரப்பட்டனர்.

இந்த நிகழ்வின்போது ஹொக்கி விளையாட்டினை மட்டக்களப்பு மாவட்;டத்தில் அறிமுகம்செய்யும் வகையில் விமானப்படை ஹொக்கி அணிக்கும் பொலிஸ் ஹொக்கி அணிக்கும் இடையிலான கண்காட்சி போட்டியொன்றும் நடைபெற்றது.

இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பான முறையில் விளையாடி இரண்டு கோல்கள் வீதம் பெற்றுக்கொண்டதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த நிகழ்வின்போது கண்கவர் கலாசார நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் யோகாசன நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.