மட்டக்களப்பினை வந்த சர்வமத பாதயாத்திரை குழு படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அருகே பிரார்த்தனை

இலங்கையில் நீடித்த சமாதானத்தையும் மோதல் அற்ற நாட்டினையும் ஏற்படுத்தவும் இனங்களிடையே புரிந்துணர்வினையும் சகவாழ்வினையும் கட்டியெழுப்பும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட சர்வமத யாத்திரை குழுவினர் இன்று காலை மட்டக்களப்பினை வந்தடைந்தனர்.
ஜப்பான் நாட்டினை சேர்ந்த பௌத்த துறவிகளும் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த மதத்தலைவர்களும் இந்த இந்த யாத்திரையை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்செய்த அவர்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்டதுடன் தமது நோக்கம் தொடர்பில் மததத்தலைவர்களுக்கு தெரியப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து நகர் ஊடாக கொக்குவில் சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டுள்ள 1990ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட 186 தமிழ் மக்களின் நினைவுத்தூபிக்கு அருகில் ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து தமது பாதயாத்திரையை தொடர்ந்தனர்.

கடந்த 14ஆம் திகதி சர்வ சமய அமைதி பிராத்தனை நடைபெற்று இந்தியாவின் மதுரையில் சங்கரன் கோயில் அமைதி கோபுரத்திலிருந்து ஆரம்பமாகிய இலங்கையின் சிவனொளிபாதமலை, கதிர்காமம், ஸ்ரீ தலதாமாளிகை,
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் பல முக்கிய பகுதிகளினூடாக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வ மதபாதயாத்திரைகள் மற்றும் சகல மத, மொழி நாடுகளைச் சேர்ந்தவர்ந்தவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, நடத்துவது இலங்கையில் நிரந்தர சமாதான சூழல் உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலென இங்கு கருத்து தெரிவித்த மதத்தலைவர்கள் தெரிவித்தனர்.