மட்டக்களப்பில் காணாமல்போன உறவுகள் ஆர்ப்பாட்டம்

காணாமல்போனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழ்களை அரசாங்கம் மீளப்பெற்று காணாமல்போனவர்களுக்கான விசேட சான்றிதழை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற காணாமல்போனவர்கள் சங்கத்தின் கவன ஈர்ப்பு  போராட்டத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல்போனவர்கள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட காணாமல்போனோர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தொண்டு நிறுவனங்களின் இணையம் என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு என்னும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனை செயலணிக்கு பகிரங்க சமர்பித்தல் என்னும் வாசகத்தினை தாங்கியதாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையானது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைப்பதற்கு நிலைமாறுகால நீதி முன்னெடுப்பில் இணைப்பங்காளியாவதற்கு இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையினை செய்துகொள்ளவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் காணாமல்போனோர் சங்க உறுப்பினரும் காந்திசேவா சங்க தலைவருமான கே.செல்வேந்திரன் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்களினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அஸீசிடம் மகஜார் ஒன்றும் கையளிக்கப்பட்டது.