கைதுசெய்யப்பட்ட நரிக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்ட நரி எனப்படும் குணசேனவை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து நரி என்பவர் தப்பிச்சென்றதையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்;டம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபரை நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி திராய்மடு பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நரி எனப்படும் ஆர்.கே.டி.எஸ்.குணசேன என்பவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதனைத்தொடர்ந்து அன்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு திராய்மடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர்,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்,மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகளும் நரி கைதுசெய்யப்படும் வரையில் ரத்துச்செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபரை கைதுசெய்வதற்கு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன் மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் உதயகாந்தன் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு நரி தேடப்பட்டுவந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் குறித்த பொலிஸ் குழுவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.