ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தலை தட்டிக்கழிப்பதே ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலாவதற்கு காரணம்

ஊடகவியலாளர்களையும் அவர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களையும் தட்டிக்கழிக்க முனைவதன் விளைவாகவே இந்த நாட்டில் தொடர்ந்தும் ஊடகத்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருவதாக  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளரும் ஊடகசுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான பெடிகமகே மீது இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகசுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான பேடிகமகே என்பவர் மீது இன்று நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குறித்த ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக நீர்கொழும்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்பகின்றபோதும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

சிலர் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற சம்பவங்களை வெளிநாட்டிற்கு செல்வதற்காக ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றனர் என்று ஊடகவியலாளர்களையும் அவர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களையும் தட்டிக்கழிக்க முனைவதன் விளைவாகவே இந்த நாட்டில் தொடர்ந்தும் ஊடகத்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றது.

எனவே இதுபோன்ற சுயநலமிக்க கருத்துக்களை ஊடகவியலாளர்கள் தவிர்த்து ஊடகவியலாளன் ஒருவனுக்கு அச்சுறத்தல் ஏற்படும்போது அதற்கு பக்கபலமாக நிற்பதே ஊடகதர்மமாகும்.

அந்தவகையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக குரல்கொடுத்துவரும் பெரும்பான்மை இன ஊடகவியலாளர்களில் சகோதரர் பேடிகமகேயும் முக்கியமானவர். இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஊடகத்துறை ஊடாக பெரும்பங்காற்றிய பேடிகமகே மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தக்குதலை தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் வன்மையான கண்டிக்கின்றோம். தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுக்கு வேண்டுகோள் யாதெனில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அரசாங்கம் கண்டுபிடித்து தண்டனைவழங்கி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் இதனை செய்ய தவறும்பட்சத்தில் ஊடகவியலாளர்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.